பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்காக ரூ.25,500 கோடி கடன் பெறுவதற்கு வெளிநாட்டு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொகை ரிலையன்ஸ் நிறுவனங்களின் அடுத்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை திருப்பி செலுத்துவதற்காக வாங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, அடுத்த ஆண்டின் காலாண்டில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஈடுகட்ட பல்வேறு வங்கிகளில் கடன் பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கடன் பெறுவதற்கான விதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடன் ஒப்பந்தம் இறுதியாகும் பட்சத்தில், கடன் பெறும் வெளிநாட்டு சந்தைக்குள் ரிலையன்ஸ் மீண்டும் நுழையும் என்று கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டுக்கு பின்பு ஒரு இந்திய நிறுவனம் வெளிநாட்டில் பெறும் மிகப்பெரிய கடனாக இந்த தொகை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இந்த கடன் தொகை வாங்கப்பட இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பான நிதிநிலை மற்றும் பலதரப்பட்ட வணிகம் காரணமாக, அந்நிறுவனத்திற்கு இந்த கடன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.