10 ஆண்டுகளுக்கு முன் தாய் அவமதிப்பு.. காத்திருந்து பழிவாங்கிய மகன்.. சினிமா போல் ஒரு சம்பவம்..!

Mahendran

செவ்வாய், 22 ஜூலை 2025 (11:59 IST)
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயை அவமதித்து தாக்கிய ஒருவரை, நீண்ட வேட்டைக்கு பிறகு மகன் ஒருவன் கொலை செய்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஒரு சினிமா காட்சியை போலவே அரங்கேறியுள்ளது.
 
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மனோஜ் என்பவர் சோனுவின் தாயை ஒரு தகராறில் தாக்கி அவமதித்துவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். தனது தாய்க்கு ஏற்பட்ட இந்த அவமானத்தால் ஆத்திரமடைந்த சோனு, மனோஜை கடந்த பத்து ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்தார். ஆனால், அவர் கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், மனோஜை சோனு கண்டுபிடித்துவிட்டார். உடனே, அவரை பழிவாங்குவதற்காக ஒரு துல்லியமான திட்டத்தை போட்டார். மனோஜின் தினசரி நடமாட்டத்தை உளவு பார்த்தார்.
 
தான் திட்டமிட்டபடி, சோனு தனது நான்கு நண்பர்களையும் இந்த கொலை சம்பவத்தில் சேர்த்து கொண்டார். மனோஜ் தனது கடையை மூடிவிட்டு தனியாக வீட்டிற்கு நடந்து சென்றபோது, அவரை சுற்றி வளைத்த சோனு மற்றும் அவரது நண்பர்கள், இரும்பு கம்பிகளால் தாக்கி கொடூரமாக கொலை செய்தனர்.
 
இந்த கொலை குறித்து முதலில் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் முடியவில்லை. இந்த நிலையில் தான், சமூக வலைத்தளங்கள் மூலம் சில முக்கிய விவரங்கள் கிடைத்தன. அதை வைத்துப் போலீசார் ஐந்து பேரை கண்காணித்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கைது செய்யப்பட்டவர்கள் சோனு, ரஞ்சித், ஆதில், சலாமும் மற்றும் ரஹ்மத் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்