மோடியின் செல்லாத அறிவிப்பிற்கு பின் உள்ள தந்திரம் - நிச்சயம் படியுங்கள்!

Webdunia
சனி, 12 நவம்பர் 2016 (12:32 IST)
செவ்வாய்கிழமை [08-11-16] பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.


 

இதனால், பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த அறிவிப்பிற்கு வரவேற்பும், எதிர்ப்பும் சம அளவில் உள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடியி இந்த அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட்- லிபரேஷன்] பொதுச் செயலாளர், திபங்கர் பட்டாச்சார்யா கடுமையாக விமர்சித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

”இரண்டு ஆண்டுகளை மோடி ஆட்சி கடந்துவிட்ட நிலையில் வெளிநாட்டு வங்கிகளில் இருந்த சொத்துக்களில் இருந்து உள்நாட்டுப் பதுக்கலின் மீது கவனம் திரும்பியிருக்கிறது. ஏதோ கருப்புப் பண முதலைகள் தங்களின் மெத்தையில் கருப்புப் பணத்தை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பது போலவும், ஒரு அடி கொடுத்தால் கருப்புப் பணம் வெளியே வந்துவிடும் என்பதுபோலவும் மோடி அரசு நடந்துகொள்கிறது. அதுபோன்ற ஒன்றை ஒருவர் பகல் கனவில் மட்டுமே நம்ப முடியும்.

யதார்த்த வாழ்க்கையில் கருப்புப் பணத்தின் சிறு பகுதி மட்டுமே தற்காலிகமாக பணமாக வைக்கப்பட்டிருக்கும். மீதமுள்ள பெரும்பகுதி தொடர்ச்சியாக சட்ட விரோத சொத்துக்களாக மாற்றப்பட்டுவிடும். (நிலமாக, நகைகளாக, பங்குச் சந்தை மூலதனமாக, மற்ற பிற லாபம் தரும் சொத்துக்களாக மாற்றப்பட்டுவிடும்) அல்லது, அரசியல்- பொருளாதார கையூட்டுகளாக மாறிவிடும். (அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை, லஞ்சமாக, அரசியல் தரகர்கள் மற்றும் இதர ஒட்டுண்ணிகளின் ஆடம்பரச் செலவுகளாக மாறிவிடும்).

பணம் செல்லாது என்ற அறிவிப்பு ஏதேனும் கருப்புப் பணத்தை வெளியில் கொண்டுவர முடியும் என்றால், தற்சமயம் கையில் இருக்கும் சிறிய அளவிலான கருப்புப் பணமாக மட்டுமே அது இருக்கும்.

அறுவை சிகிச்சை செய்வது போன்ற துல்லியத்துடன் செயல்படுவதிலிருந்து மிகவும் விலகிச் சென்று, தடாலடியாக செயல்பட்ட அறிவிப்பின் காரணமாக, அன்றாட கூலிகள், தெருவோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள், வங்கி கணக்கு இல்லாத - வங்கி கடன் அட்டைகள் இல்லாத சாதாரண மக்கள்தான் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கின் கொடுமையை அனுபவிப்பார்கள்.

மக்களுக்கு ஏற்பட்ட ‘இரு தரப்பு சேதாரம்‘ பற்றியும் ‘தற்காலிக சிரமங்கள்‘ குறித்தும் மோடி அரசாங்கமும் பிஜேபியின் பிரச்சாரகர்களும் அற்பக் கவலை கூட படவில்லை.

மாறாக, முன்பு பசு பாதுகாப்பு பெயரில் வன்முறை செய்தவர்களை, ஆட்சியைக் காவி மயப்படுத்துவதை எதிர்த்தவர்கள் மீது தேச விரோத குற்றம் செயதவர்கள் என்றாக்கியது போல, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கையும் போலி எண்கவுண்டர்களையும் கேள்வி கேட்டவர்களை தேச விரோதிகள் - பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தியது போல, எதிர்ப்புக் கருத்து சொல்லும் எந்த ஒருவரும்  ‘ஊழலை- கருப்புப் பணத்தைப் பாதுகாப்பவர்‘ என்று முத்திரை குத்தப்பட்டனர்.

மோடி அரசாங்கத்தின் மிகப் பலவீனமான புள்ளியாக பொருளாதாரம் இருக்கிறது. பிஜேபியின் கடும் ஆதரவாளர்கள் கூட விவசாய நெருக்கடி, விடாமல் அதிகரிக்கும் விலைவாசி, வீழ்ந்துவரும் வேலை வாய்ப்பின் விளைவுகளை உணர்கிறார்கள்.

மோடியின் செல்லாத நோட்டு நாடகத்தின் மூலம் மக்களின் கோபத்தைத் தணிக்கும் வகையில் பேசுதற்கான அம்சம் எதையாவது உருவாக்கி விட முடியுமா? கட்சியின் பிருமாண்டமான பொருளாதார வாக்குறுதிகளின் மீது நம்பிக்கையை மீட்டெடுக்க முடியுமா என்று  பார்க்கிறார்கள்.

இந்த அரசியல் கணக்குகளுக்கு அப்பால், கருப்பு பணத்தின் மீது தாக்குதல் நடத்துவது போன்ற நாடகத்தின் பின்னால், மிக ஆழமான ஒரு பொருளாதாரத் திட்டமும் இருக்கவே செய்கிறது. வங்கிகள் மிகப் பெரும் அளவிலான பணப் புழக்க (liquidity) நெருக்கடியை எதிர்கொள்கின்றன. பெருமளவிலான தொழில் நிறுவனக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

அதன் காணரமாக, மிகப் பெரும் அளவிலான வாராக் கடன் சுமையில் சிக்கிக்கொண்டுள்ளன. இந்த நிலையில், சாதாரண  மக்களின் கையில் புழங்கும் பெருமளவிலான தொகையையும், அத்துடன்,   வெள்ளையாக்கப்பட்ட கருப்புப் பணத்தை கணிசமாகவும் உறிஞ்சியெடுப்பதுதான் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழி என்ற அவர்கள் கருதுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நெருக்கடியிலிருந்து ஒரு மாறுபட்ட ‘தப்பிச் செல்லும் வழியை‘ (bailout) பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் கூற்றுப்படி, இது பணமில்லாத பொருளாதாரம் நோக்கிய உறுதியான நடவடிக்கை! மேல் நோக்கி முன்னேறும்  “இந்தியா“, இன்டர் நெட் வங்கிச் செயல்பாடு, வங்கிக் கார்டுகள் வழியிலான பணப்பட்டுவாடாவிற்குள் நுழைந்துவிட்டதாக சொல்லிக்கொள்கிறார்கள். தெருவில் கிடக்கும் பொருளாதாரம்தான்- காய்கறி வியாபாரிகள், பாரம்பரிய சந்தைகளில் காய்கறி வாங்குபவர்கள், பக்கத்திலிருக்கும் மளிகைக் கடையில் அல்லது சின்ன கடையில் பொருள் வாங்குபவர்கள் மட்டும்தான் ‘பிளாஸ்டிக் பணத்தின்“ (வங்கி அட்டையின்) பணமில்லாத உலகத்திற்கு வெளியே கிடக்கிறார்கள்.

எனவே, பணம் செல்லாது என்ற அறிவிப்பு அவர்கள் அனைவரையும் தொழிலில் இருந்து விரட்டுவதை இலக்காகக் கொண்டதாகும். அவர்களை மறுபொருளாதாரக் கட்டமைப்பிற்குள் இழுத்து வருவதை நோக்கமாகக் கொண்டதாகும். அந்தப் பொருளாதார மறுகட்டமைப்பில் எப்போதும் சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கிவிடும்!

வங்கி முறைக்கு வெளியே உள்ள பலப் பத்து லட்சங்கள் எண்ணிக்கையிலான இந்தியர்கள் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இது வெறும் தற்காலிக துன்புறுத்தல் மட்டுமல்ல. அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பு அற்றதாக ஓரம் கட்டப்படுவதாக மாற்றப்பட்டுள்ளது”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்