ஏழைகளின் கணக்கில் ரூ.10,000 டெபாசிட் - விரைவில் மோடி அறிவிப்பு?

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2016 (16:50 IST)
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதில் புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார்.   


 

 
இந்த அறிவிப்பு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கவும், பழைய நோட்டுகளை மாற்றவும் பொதுமக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.  
 
ஆனால், பெரும்பாலான ஏ.டி.எம்-களில் பணம் இல்லை. அப்படியே ஒரு சில ஏ.டி.எம் மையங்களில் பணம் இருந்தாலும், அங்கு மக்கள் கூட்டம் வரிசை கட்டி நிற்பதால், பணம் எடுப்பது பெரும்பாடாக இருக்கிறது. எனவே தங்களின் அன்றாட செலவுகளுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் பணம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், வரும் தேர்தல்களில், மக்களின் கோபம் பாஜகவிற்கு எதிராக திரும்ப வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு நம்புகிறது. எனவே அதை சமாளிக்க, சில சலுகைகளை அளிக்க மோடி அரசு முடிவெடுத்துள்ளது.
 
நாட்டில் உள்ள ஏழைகளுக்கு ‘ஜன்தன்’ திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட 25 கோடி கணக்குகளில் 5.8 கோடி கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லை. 
 
எனவே, அந்த அனைத்து வங்கி கணக்குகளிலும், தலா ரூ.10 ஆயிரம் இருப்பு வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மொத்தம் ரூ. 58 ஆயிரம் கோடி செலவாகும்.
 
இந்த அறிவிப்பின் மூலம், மக்கள் மத்தியில் ஏற்பட்ட கோபம் மற்றும் அதிருப்திகள் மறைவதற்கு வாய்ப்பிருப்பதாக மோடி அரசு நம்புவதாக தெரிகிறது.
 
எனவே, இதுகுறித்த அறிவிப்பு பிரதமர் மோடியிடமிருந்து விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்