ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது பெட்டிங்கில் கலந்து கொண்ட ஒருவர், சூதாடி தன்னுடைய மனைவியை இழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாகாபாரதத்தில் தர்மர், தனது மனைவி பாஞ்சாலியை வைத்து சூதாடி கௌரவர்களிடம் தோற்றது போன்ற ஒரு சம்பவம் உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
கான்பூர் மாவட்டத்தின் கோவிந்த்நகர் பகுதியியில் வசிப்பவர் ரவீந்தர் சிங். இவர் ஜஸ்மீத் கவுர் என்ற பெண்னை ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
ரவீந்தருக்கு சூதாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. திருமணமான நாள் முதலே அவரின் நடவடிக்கைகள் மனைவிக்கு தெரியவந்துள்ளது. மனைவியின் நகைகள், வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை ஏற்கனவே சூதாட்டத்தில் அவர் இழந்துள்ளார். மேலும், குடிப்பழக்கமும் இருந்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் போது சூதாடிய அவர், தன்னுடைய வீட்டை விற்பதற்கு அவர் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. மேலும், தன்னுடைய மனைவியை வைத்து அவர் சூதாடி அதிலும் தோற்றுப்போனார். இதனால், அவரை சூதாட்டத்தில் வெற்றி பெற்றவர்கள், அவரின் மனைவி ஜஸ்மீத் கவுருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால், சமூக ஆர்வலர் ஒருவரின் உதவியுடன், காவல் நிலையம் சென்ற புகார் கொடுத்தார் ஜஸ்மீத். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவருக்கு தொல்லை கொடுத்த நபர்களை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.