வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

Mahendran

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (16:15 IST)
மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினால் அவர்களுக்கு, 'ஷ்ரமஸ்ரீ' என்ற திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு அல்லது வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே மே.வங்கத்தில் இருந்து வெளிமாநிலம் சென்றவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
மம்தா பானர்ஜி, குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோக் குடியேறிகள் என்று முத்திரை குத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த துன்புறுத்தல்களால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மேற்கு வங்கத்திற்கு திரும்ப நேரிட்டதாக அவர் கூறினார். இந்தத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், நிதிப்பலனும் அளிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 
இதன்படி 'ஷ்ரமஸ்ரீ' திட்டத்தின்படி மாநிலத்திற்கு திரும்பும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் முதலில் ஒருமுறை பயணச் செலவுகளுக்காக ரூ. 5,000 வழங்கப்படும். அதன் பிறகு, ஒரு வருடத்திற்கு அல்லது அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ. 5,000 உதவித்தொகை அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.
 
மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு குறித்து பாஜக தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. மேற்கு வங்க சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, "ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளியும் மாதம் ரூ. 50,000 முதல் ரூ. 1.5 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். இந்த ரூ. 5,000 அவர்களுக்கு எந்த பயனும் அளிக்காது. அவர்கள் குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தென்னிந்தியாவில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த ரூ. 5,000-க்காக அவர்கள் மேற்கு வங்கத்திற்கு திரும்பி வரமாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்