மாநிலங்களவை உறுப்பினரும், பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கலைத்துறை சார்பில் சுரேஷ் கோபியை மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமித்தது. மலையாள சினிமாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் எம்.பி. சுரேஷ் கோபி தான்.
இதனையடுத்து கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் சுரேஷ் கோபி போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் தான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல என சுரேஷ் கோபி தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் சட்டசபை தேர்தலின் போது பாஜகவுக்கு ஆதரவாக சுரேஷ் கோபி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதுவரை பாஜகவில் அதிகாரப்பூவமாக தன்னை இணைத்துக்கொள்ளாத சுரேஷ் கோபி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இவர் மத்திய சினிமா வளர்ச்சி கழகத்தின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.