மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள பத்லாப்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் தஷரத் குர்ஹடே என்பவர். இவர் தனது மகளுக்கு ஒரு நல்ல வரனை பார்த்து, சக்திக்கு மீறி செலவு செய்து தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த முடிவு செய்தார். இதனையடுத்து திருமண செலவுக்காக தன்னுடைய சொந்த நிலத்தில் ஆசை ஆசையாக 40 ஆண்டுகளாக வளர்த்து வந்த 860 மரங்களை வெட்டி, அதனை நல்ல விலைக்கு விற்று அதில் கிடைத்த பணத்தில் மகளின் திருமணத்தை முடித்தார். அவருடைய வீட்டில் 40 ஆண்டுகளுக்கு பின் இந்த திருமண விசேஷம் நடக்கின்றது என்பது குறிப்பிடத்த்க்கது
இந்த நிலையில் சொந்த நிலமாக இருந்தாலும் வனத்துறையின் அனுமதியின்றி 860 மரங்களை வெட்டி விற்றது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தஷரத்திடம் விசாரணை நடத்தினர். ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் மரங்களை வெட்டியது தவறு என்றும், அதற்கு தண்டனையாக மரங்களை வெட்டிய அதே இடத்தில் மீண்டும் 4 மாதங்களுக்குள் வெட்டிய மரங்களை போல இருமடங்கு மரக்கன்றுகளை நட வேண்டும் என உத்தரவிட்டு சென்றனர்.
மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மரங்களை நடவில்லை என்றால் புதிய மரங்களை நடுவதற்குரிய தொகை அவரிடம் இருந்து வசூல் செய்யப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தஷரத் குர்ஹடே சந்தோஷமாக இந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு, இரு மடங்கு அல்ல, நான்கு மடங்கு மரங்களை நடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.