அலபாமாவில் கருக்கலைப்பு தடை சட்டம் மீது விமர்சனம்: 'பெண்கள் உடல் மீது முடிவெடுக்கும் ஆண்கள்'

வியாழன், 16 மே 2019 (19:25 IST)
எல்லா விதமான கருக்கலைப்புகளையும் சட்டப்பூர்வமாக தடை செய்துள்ள அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் அலபாமா இணைந்துள்ளது.
இந்தப் புதிய சட்டத்தின்படி பாலியல் வல்லுறவில் மூலம் உண்டான கரு, முறையற்ற குடும்ப உறவுகள் போன்றவற்றால் உண்டான கரு ஆகியவற்றையும்கூட கருக்கலைப்பு செய்ய முடியாது.
 
இந்தச் சட்டம் கீழமை நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டாலும், அமெரிக்க உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் அந்தத் தடை நீக்கப்படும் என்று இந்த சட்டத்துக்கு ஆதவானவர்கள் கருதுகின்றனர்.
 
அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பால் சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரெட் கவானா மற்றும் நீல் கோர்சக் ஆகியோரால், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வில் பழமைவாத நீதிபதிகள் பெரும்பான்மையாக உள்ளனர்.
 
கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் வகையில் 1973ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றவேண்டும் என்று கருக்கலைப்பு ஆதவாளர்கள் விரும்புகின்றனர்.
 
இரண்டு தந்தையர், ஒரு தாய், இரட்டை குழந்தைகள்: எப்படி சாத்தியமானது?
அலபாமா மாகாண செனட் சபையில் நான்கு பெண்கள் உள்பட 35 உறுப்பினர்கள் உள்ளனர். கருக்கலைப்பை சட்டவிரோதமாக்கும் புதிய சட்டத்துக்கு பெண் உறுப்பினர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
 
இந்த சட்டத்துக்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த ஆளுநர் கே ஐவி ஒப்புதல் அளித்துள்ளார்.
 
அமெரிக்காவின் வேறு 16 மாகாணங்களும் கருக்கலைப்பு மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
 
லூசியானா மாகாணத்தில் கருக்கலைப்பு செய்ய கட்டுப்பாடுகள் விதித்த விதிமுறைகளை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடுத்தது. எனினும், அந்த வழக்கு இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
 
புதிய கருக்கலைப்பு சட்டத்தின் விவரங்கள்
 
அலபாமா மாகாணத்தில் புதிதாக இயற்றப்பட்டுள்ள சட்டத்தின்படி கருக்கலைப்பு செய்ய முயலும் மருத்துவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கருக்கலைப்பு செய்து முடித்தபின் கண்டறியப்பட்டால் 99 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
 
25க்கு ஆறு எனும் விகிதத்தில் இந்த சட்டம் நிறைவேறியது. சட்டத்தை ஆதரித்த அனைவரும் ஆண் உறுப்பினர்கள்.
 
மூன்று மாதங்களுக்கு முன் மூளைச் சாவடைந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை
பெண்கள் உடல் மீதான உரிமைகள் குறித்து ஆண்களே முடிவெடுக்கின்றனர் என்று அவையில் பேசிய பெண் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
 
ஆண்கள் கருத்தடை செய்துகொள்வதை தடை செய்யும் சட்ட முன்மொழிவு ஒன்றை அப்போது ஒரு பெண் உறுப்பினர் தாக்கல் செய்தபோது அவையில் சிரிப்பொலி எழுந்தது. அந்த முன்மொழிவு அவையில் தோல்வியடைந்தது.
 
ஆண்கள் பெண்கள் உடல் மீது ஆதிக்கம் செலுத்துவது போல நாங்கள் ஆண்கள் உடல் மீது அதிகாரம் செலுத்துவதில்லை என்று அந்தப் பெண் உறுப்பினர் வாக்கெடுப்புக்குப் பிறகு தெரிவித்தார்.
 
ஜார்ஜியா, கென்டகி, மிஸ்ஸிசிப்பி மற்றும் ஒஹாயோ ஆகிய அமெரிக்க மாகாணங்களில் கருவின் இதயத்துடிப்பு கண்டறியப்பட்ட பின்னர் கருக்கலைப்பு செய்யத் தடை விதித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
 
ஒரு பெண் தாம் கருவுற்றுள்ளதை அறியும் முன்னரே, கருவின் ஆறாவது வாரத்திலேயே இதயத்துடிப்பை கண்டறிய முடியும் என்பதால் கருக்கலைப்பு என்பதே சாத்தியமற்றது என இந்த சட்டத்தின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
 
கருவில் உள்ள சிசுவை மாசுபாட்டில் இருந்து காப்பது எப்படி?
இது அமெரிக்க அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் கருக்கலைப்புக்கு எதிரான வேட்பாளர்கள் எதிர்வரும் தேர்தல்களில் அரசியல் லாபமீட்ட மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி என தேசிய பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.
 
அலபாமாவில் 1990களில் 20ஆக இருந்த கருக்கலைப்பு மையங்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாகக் குறைந்துள்ளது.
 
பிற மாகாணங்களிலும் இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது. 2017ஆம் ஆண்டின் தரவுகளின்படி ஆறு அமெரிக்க மாகாணங்களில் ஒரே ஒரு கருக்கலைப்பு மையம் மட்டுமே இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்