மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள சாகாந்தி கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் சுவருக்கு, வெறும் நான்கு லிட்டர் பெயிண்ட் அடிக்க, 168 தொழிலாளர்களும், 65 மேஸ்திரிகளும் பயன்படுத்தப்பட்டு, ரூ.1.07 லட்சம் செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த பில்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
சாகாந்தி கிராம பள்ளியில் நான்கு லிட்டர் ஆயில் பெயிண்ட் அடிக்க ரூ.1.07 லட்சம் செலவு செய்யப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. இதேபோல், நிப்பனியா கிராமத்தில் உள்ள மற்றொரு பள்ளியில் 20 லிட்டர் பெயிண்ட்டுக்கு ரூ.2.3 லட்சம் செலவிடப்பட்டதாக பில்கள் கூறுகின்றன.
சாகாந்தி கிராமத்தில் அந்த ஒரே ஒரு சுவருக்குப் பெயிண்ட் அடிக்க 168 தொழிலாளர்களும் 65 மேஸ்திரிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், நிப்பனியா கிராமத்தில் வெறும் 10 ஜன்னல்கள் மற்றும் நான்கு கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்க 275 தொழிலாளர்களும், 150 மேஸ்திரிகளும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மேற்கொண்ட சுதாகர் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற கட்டுமான நிறுவனம் தான் இப்படி ஒரு பில்லை பதிவு செய்துள்ளது. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், அந்த பில், சம்மந்தப்பட்ட பள்ளி முதல்வர் அவர்களால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.