வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருப்பதை அடுத்து தமிழகத்திற்கு மழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இது வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த நிலையில் தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு இடையே நிலை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை அல்லது இரவு இந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரையில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து புரி மற்றும் திகா கடற்கரை இடையே கரையை கடக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்துள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.