ஹரியானாவில் சாமி சிலை ஒன்றிற்கு பள்ளியில் பாடம் நடத்தி தேர்வு எழுத வைக்கும் சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் கைதால் நகரில் உள்ள மேரி கோல்ட் என்ற பள்ளியில் சமீபத்தில் பள்ளி தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் 5ம் வகுப்பு படிக்கும் லட்டு கோபால் ஜி என்ற மாணவன் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்து 500/500 மார்க் எடுத்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யார்ரா அந்த பையன்? என்று எல்லாரும் வியப்புடன் பார்க்க அது பையனில்லை லட்டு கோபால் ஜி என்ற சாமி சிலை.
இந்த லட்டு கோபால் சிலையை பள்ளியில் சேர்த்தவர் சிவான் கேட் என்ற பகுதியில் வசிக்கும் டாக்டர், சஞ்சீவ் வசிஷ்ட். சஞ்சீவின் குடும்பம் பல தலைமுறைகளாகவே லட்டு கோபால் ஜியை வணங்கி வருபவர்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கும் முன்னதாக லட்டு கோபால் ஜியின் உருவச்சிலை ஒன்றை சஞ்சீவ் வாங்கி வந்துள்ளார். அடிப்படையில் லட்டு கோபால் ஒரு குழந்தை சிலை. அதனால் குழந்தையாகவே அதை கருதிய அவர்கள் அப்பகுதியில் உள்ள மேரி கோல்ட் பள்ளியில் லட்டு கோபாலை சேர்க்க சென்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் சிலையை எப்படி பள்ளியில் சேர்க்க முடியும் என மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தை சஞ்சீவ் அப்பகுதியின் கல்வி அதிகாரி வரை கொண்டு சென்றுள்ளார். சஞ்சீவின் கோரிக்கையை ஏற்ற அந்த அதிகாரி, லட்டு கோபாலை பள்ளியில் சேர்த்துக் கொள்வதாகவும், ஆனால் லட்டு கோபாலுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் வேறொரு வசதியற்ற குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்றும் நிபந்தனை வைத்துள்ளார்.
அதன்பேரில் தற்போது லட்டு கோபால் ஜியும், ஒரு ஏழைக் குழந்தையும் அதே பள்ளியில் படித்து வருகின்றனர். லட்டு கோபாலுக்கான தேர்வுகளை மட்டும் பள்ளி நிர்வாகமே எழுதுகிறது. அதுமட்டுமல்லாமல் வாரம் 3 நாட்கள் லட்டு கோபால் சிலை வகுப்பறையில் சக மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனிக்கிறதாம்.
Edit by Prasanth.K