டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடைவடைந்ததையடுத்து, காணொலி காட்சி மூலம் டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வருகிற 23ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.