அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜர்...!!

செவ்வாய், 2 ஜனவரி 2024 (15:23 IST)
வேதாந்தா குழும நிறுவனத்திடம் இருந்து ரூ.50 லட்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.
 
 
மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மின்சாரம் மற்றும் எஃகு துறையில் புதிய உற்பத்தி மையங்கள் தொடங்குவதற்கு  ப்ராஜெக்ட் விசா’ விதிமுறைகள் கடந்த 2010-ம்ஆண்டு கொண்டுவரப்பட்டன. 
 
ஆனால் இந்த விசாக்களை மீண்டும் பயன்படுத்த முடியாது. எனினும், அரிய மற்றும் விதிவிலக்குள்ள விஷயங்களில் உள்துறை செயலாளர் அனுமதியுடன் மீண்டும் விசா வழங்குவது குறித்து பரிசீலிக்க விதிகள் உள்ளன. அப்போது வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்தி மையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது.
 
ஆனால் இந்தப் பணிகள் முடிய காலதாமதமானது. இதனால் சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களுக்கு ப்ராஜெக்ட் விசாவை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுத் தர கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது கூட்டாளி பாஸ்கர ராமன் ஆகியோரின் உதவியை வேதாந்தா குழுமத்தின் ஊழியர் ஒருவர் நாடியுள்ளார்.
 
இந்த ப்ராஜெக்ட் விசாவை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை பெற்றுத் தந்ததற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிதம்பரம் வீட்டில் கடந்த 2022ம் ஆண்டு சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பாஸ்கர ராமனை கைது செய்தனர்.
 
மேலும் சிபிஐ அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, நிதி மோசடி தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்