கர்நாடக மாநிலத்தில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் பெயரில் உள்ள இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு, கர்நாடக போக்குவரத்து துறை ரூபாய் 38.26 லட்சம் அபராதம் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அபராதத்திற்கும் நடிகர்களுக்கும் நேரடி தொடர்பு இல்லையென்றாலும், அவர்களது பெயர்கள் இன்னும் வாகனப்பதிவேட்டில் நீடிப்பதால் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.
இந்த இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் ஒரு காலத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர். தற்போது, கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் யூசுப் ஷெரீப் இந்த கார்களை வைத்திருக்கிறார். ஆனால், அவர் இந்த கார்களை வாங்கிய பிறகு தனது பெயருக்கு மாற்றிக்கொள்ளவில்லை. கார்களின் ஆவணங்கள் இன்னும் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் பெயரிலேயே உள்ளன.
கர்நாடக மாநில சட்டப்படி, பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக கர்நாடகாவில் பயன்படுத்தப்பட்டால், அவை கர்நாடகாவில் மீண்டும் பதிவு செய்யப்பட்டு அதற்கான வரி செலுத்தப்பட வேண்டும். யூசுப் ஷெரீப் பயன்படுத்தும் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் இந்த காலக்கெடுவை மீறியுள்ளன.
அமிதாப் பச்சனுக்குச் சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டம் கார் 2021 ஆம் ஆண்டிலிருந்தும், அமீர்கானுக்குச் சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் 2023 ஆம் ஆண்டிலிருந்தும் கர்நாடகாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கார்களின் பெயரை மாற்றாமல், வரிகளும் செலுத்தாமல் பயன்படுத்தியதால், கர்நாடக போக்குவரத்துத் துறை இந்த அபராதத்தை விதித்துள்ளது.
இந்த அபராதத்திற்கும் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், கார்கள் இன்னும் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், கர்நாடக மாநில ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள அபராத நோட்டீஸில் அவர்களது பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சம்பவம், பிற மாநிலங்களில் இருந்து வாகனங்களை வாங்குபவர்கள் உடனடியாக தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்வதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.