கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடலை பாடி கிளப்பிய சர்ச்சை அடங்குவதற்குள், ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்றொரு எம்எல்ஏவும் அதே பாடலை பாடியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநில சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், எதிர்பாராத விதமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் வாழ்த்து பாடலைப் பாடினார். அத்துடன், "நானும் எதிர்க்கட்சித் தலைவரான அசோகாவும் ஒரு காலத்தில் ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்து செயல்பட்டோம். இப்போது வெவ்வேறு கட்சிகளில் உள்ளோம்" என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்குவதற்குள், தும்கூரு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.டி. ரெங்கநாத், துணை முதலமைச்சர் பாடிய அதே பாடலின் முதல் வரியை மீண்டும் பாடினார். மேலும், இது ஒரு "நல்ல பாடல்" என்றும், "நாம் பிறந்த மண்ணுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்பதுதான் அதன் பொருள். இதில் எந்தத் தவறும் இல்லை" என்றும் அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடினாலும், அவர் பாஜகவையும் விமர்சித்தார். "வலதுசாரி கட்சியினர் மக்களை ஜாதி, மத அடிப்படையில் பிரிக்க நினைக்கிறார்கள். அதை நாங்கள் எதிர்க்கிறோம். அவர்களின் கொள்கைகள் எங்களுக்கு ஏற்புடையதல்ல" என்றும் குறிப்பிட்டார்.