மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் பயனடையலாம் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது மேகதாது அணை கட்டினால் பெங்களூருக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்றும் அதேபோல் வறட்சி காலங்களில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரையும் திறந்து விட முடியும் என்று கூறிய அவர் இரு மாநில மக்களும் இந்த அணையால் பயன் அடைவார்கள் என்றும் எனவே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து உள்ளதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளதாகவும் இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் தமிழ்நாடு, கர்நாடகா நதிநீர் பங்கீட்டில் இந்த ஆண்டு எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும் ஆனால் அதே நேரத்தில் நீண்ட காலத்துக்கு இரு மாநிலங்களுக்கு இடையே நல்ல நட்புறவு நிலவ வேண்டும் என்றால் மேகதாது அணை கட்டுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
Edited by Mahendran