கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. இதை தொடர்ந்து, காவல்துறையினர் அதிரடியாக நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடா ஆகியோரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். "சட்டத்திற்கு மேலானவர் யாரும் இல்லை" என உச்ச நீதிமன்றம் கடுமையாக கருத்து தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த ரேணுகா சுவாமி என்ற இளைஞர், நடிகை பவித்ரா கவுடாவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள், ரேணுகா சுவாமியை கடத்தி சென்று பெங்களூருவில் உள்ள ஒரு குடோனில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து, ரேணுகா சுவாமியின் மனைவி ரக்ஷிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "குற்றத்தின் தீவிரம் மற்றும் ஆதாரங்களை அழிப்பதற்கான சாத்தியக்கூறுகள்" ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா ஆகியோருக்கு சிறையில் எந்தவிதமான சிறப்பு சலுகைகளும் வழங்கப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.