பெங்களூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பிடிபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் உள்ள கருப்புப் பணங்களை ஒழிப்பதாக கூறிய பிரதமர் மோடி, மக்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.
ஆனால், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள், அதை வெவ்வேறு வழிகளில் வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றனர். கருப்புப் பணத்தை பெற்றுக் கொண்டு, புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுத் தர பல ஏஜெண்டுகளும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
அந்த ஏஜெண்டுகள், கருப்புப் பணங்கள் வைத்திருப்பவர்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக நல்ல கமிஷன் தொகையையும் அவர்கள் பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், பெங்களூரில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் பல இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, ஒரு ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான கட்டடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சிக்கியது. முக்கியமாக, அதில் ரூ.4 கோடி 70 லட்ச ரூபாய் புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. மீதம் இருந்த பணம் பழைய 500 ரூபாய் நோட்டுகளாக இருந்தது.
அதேபோல், வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு பயன்படுத்தப்பட்ட போலி அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், 5 கிலோ தங்க கட்டிகளும், 6 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போதுள்ள நிலவரப்படி, வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளின் அதிக பட்ச தொகை இதுவாகும்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை எடுக்க முடியாமல் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் காத்துக் கிடக்கிறார்கள். அப்படியே எடுத்தாலும் 2 ஆயைரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது. அப்படியிருக்க, 4 கோடி 70 லட்ச ருபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக கைப்பற்றிய விவகாரம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.