இந்தியாவிலே முதன்முறையாக கேரள மாநிலத்தில் திருநங்கைகளுக்கான தனி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலே முதன்முறையாக கேரள மாநிலம் எர்னாகுளம் மாவட்டத்தில் உள்ள திரிக்ககரா எனும் இடத்தில் திருநங்கைகளுக்கான தனி பள்ளி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
சஹாஜ் இண்டர்நேஷனல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பள்ளியை திருநங்கைகளுக்கான செய்ற்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் நடிகை கல்கி சுப்பிரமணியம் திறந்து வைத்தார். தேசிய திறந்தநிலை கல்வி மையத்துடன் இணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் படிப்பவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வை நேரடியாக எழுத முடியும். அதோடு பள்ளியில் தையற்கலை, இயற்கை வேளாண்மை, ஆளுமைத் திறன் போன்ற பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருநங்கைகள் கல்வி அறிவு பெறுவதுடன், அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதைக்கொண்டு சுய தொழில் செய்யவும் அவர்களுக்கு உதவியாய் அமையும்.
கேரள மாநிலம் தொடர்ந்து திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ரெயில்வே துறையில் அவர்களுக்காக பணியிடம் ஒதுக்கியது. தற்போது பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இதைப்போல் எல்லா மாநிலங்களும் செயல்பட்டால் அவர்களுக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்படாது.