வெற்றிகரமாக 200 கோடி தடுப்பூசிகள்.. இந்தியா சாதனை! – பிரதமர் பெருமிதம்!

ஞாயிறு, 17 ஜூலை 2022 (14:26 IST)
கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் 200 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதி வாக்கில் கொரோனா பாதிப்புகள் பரவத் தொடங்கியது. இதனால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்ட நிலையில் பெரும்பான்மையான மக்கள் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் தற்போது வரை 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி “மீண்டும் வரலாறு படைத்துள்ளது இந்தியா. தற்போதுவரை 200 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நமது மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோர் முக்கியபங்கு வகித்துள்ளனர். அவர்களின் மன உறுதியையும், உழைப்பையும் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்