எஸ்பிஐ வங்கி மூலமாக ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரையிலான பல்வேறு மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் பல கட்சிகளுக்கும் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த திட்ட முறையில் ஜனநாயக தன்மை இல்லையென்றும், அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளதாகவும் தற்போது இந்த திட்டத்தை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம் இந்த திட்டம் மூலமாக 2018 முதல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளித்தவர்கள் விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்கள் முன்னதாக வெளியான அறிக்கையின்படி, 2022-2023ம் ஆண்டில் தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக கட்சிக்கு கிடைத்த நிதி ரூ.1,300 கோடி ஆகும். காங்கிரஸுடன் ஒப்பிடும்போது இது ஏழு மடங்கு அதிகம். கடந்த ஆண்டில் பாஜக கட்சி பெற்ற மொத்த தேர்தல் நிதி ரூ.2,120 கோடியாகும். இந்நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் எந்தெந்த நிறுவனங்களிடம் எவ்வளவு நிதி பெற்றனர் என்ற விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள இந்த சமயத்தில் இந்த பட்டியல் வெளியானால் அது குறிப்பிட்ட அந்த நிறுவனங்களும், கட்சிகளுக்கும் இடையேயான நெருக்கத்தை அம்பலப்படுத்திவிடும் என்பதால் அது தேர்தலில் பெரிதும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதால் அரசியல் கட்சிகள் பலவும் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.