இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில சட்டப்பேரவையில் இது குறித்து பேசியதாவது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் கடுமையான சட்டங்கள் ஆந்திராவில் கொண்டு வரப்படும். அதேபோல பெண்களுக்கு எதிராக பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் இரு பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகிய எனக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததில் என்ன தவறு இருக்கிறது. என்கவுன்ட்டர் செய்த தெலங்கானா போலீஸாருக்கும், முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் எனது பாராட்டுகள்.
அதேசமயம், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீஸார் யார் என்பதையும் முதல்வர் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு திரைப்படத்தில் ஹீரோ யாரையாவது கொலை செய்தால், நாம் கை தட்டிப் பாராட்டுகிறோம்.
ஆனால், அதை நிஜ வாழ்க்கையில் செய்தால் டெல்லி தேசிய மனித உரிமை ஆணையத்தில் இருந்து ஒருவர் வந்து நீங்கள் செய்தது தவறு என்று கூறுவார். நம்முடைய சட்டங்கள் மோசமான நிலையில் இருக்கின்றன என உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.