பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

Mahendran

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (10:21 IST)
பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு, 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு, மீண்டும் 40 நாட்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
 
சாமியார் குர்மீத் ராம் ரஹீம், ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள சுனாரியா சிறையில் இருந்து இன்று காலை 40 நாட்களுக்கு பரோலில் வெளியே வந்தார். 2017-ஆம் ஆண்டு முதல், இது இவருக்கு 14-வது முறையாக வழங்கப்பட்ட பரோல் என்பது குறிப்பிடத்தக்கது.
 
2017-ஆம் ஆண்டு, தனது இரண்டு சீடர்களை பலாத்காரம் செய்த வழக்கில் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  2019-ஆம் ஆண்டு, பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் அவருக்கும் மற்ற மூன்று பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.
 
2002-ஆம் ஆண்டு தனது மேலாளரான ரஞ்சித் சிங் கொலை வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், மே 2024-இல், இந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டார்.
 
ராம் ரஹீமின் பரோல் மற்றும் விடுமுறைகள் பலமுறை பஞ்சாப், ஹரியானா மற்றும் அண்டை மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களுடன் ஒத்துப் போயுள்ளன. பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலின்போது 21 நாட்களுக்கு, ஹரியானா உள்ளாட்சித்தேர்தலின்போது ஒரு மாதத்திற்கு, மற்றும் ஹரியானா இடைத்தேர்தலின்போது 40 நாட்களுக்கு என மூன்று முறை பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்