கோவாவில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மாணவர்களுடன் உரையாடும் போது தான் ஆபாச படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட சம்பவம் நடைபெற்றது.
மனோகர் பாரிக்கரிடம், நீங்கள் சிறுவயதில் எந்த மாதிரியான படங்கள் பார்ப்பீர்கள் என மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் நாங்கள் அந்த காலத்தில் ஆபச படங்களையும் பார்த்தோம். ஆனால் தற்போது நீங்கள் டிவியில் நாங்கள் பார்த்ததைவிட அதிக ஆபாசம் கொண்ட படங்களை பார்க்கிறீர்கள்.
ஒருமுறை ஒரு பிரபலமான அடல்ட் படத்திற்கு நானும் எனது சகோதரரும் சென்றிருந்தோம். அப்போது அதே படத்திற்கு எங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒருவரும் வந்திருந்ததை இடைவேளயின் போது பார்த்தோம். அவர் எனது அம்மாவுடன் தினமும் பேசுவார். எனவே நானும் எனது சகோதரனும் உடனே அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டோம்.
வீட்டுக்கு சென்றவுடன், எனது அம்மாவிடம் நாங்கள் இன்று ஒரு படத்திற்கு சென்றோம் அந்த படம் மிகவும் ஆபாசமாக இருந்ததால் பாதியிலேயே திரும்பி வந்துவிட்டோம் என கூறிவிட்டோம். நாங்கள் எதிர் பார்த்தது போலவே அந்த நபர் எனது அம்மாவிடம் வந்து எங்களை ஆபாச படம் ஓடும் தியேட்டரில் பார்த்ததாக கூறினார்.
அப்போது எனது அம்மா, அவர்கள் எந்த படத்துக்கு சென்றார்கள் என்பது எனக்கு தெரியும், நீங்கள் ஏன் அந்த படத்திற்கு சென்றீர்கள் என கேட்டார். எனவே முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்சனைகளை சமாளிக்கலாம் என மனோகர் பாரிக்கர் பேசினார்.