அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கிய மாணவி!

வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (13:51 IST)
ஐதராபாத்தில் பள்ளி மாணவி ஒருவர் பள்ளிக்கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் சக மாணவிகள் முன்னிலையில் அவமானமடைந்த அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
 
ஐதராபாத் மல்கஞ்கிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சாய் தீப்தி என்ற 14 வயது மாணவி 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் 2000 ரூபாய் பள்ளிக்கட்டணம் செலுத்தாததால் அவரை பள்ளி நிர்வாகம் தேர்வு எழுது அனுமதிக்கவில்லை. இதனால் பள்ளியில் இருந்து சக மாணவிகள் முன்னிலையில் மாணவி சாய் தீப்தி ஆசிரியர்களால் வெளியேற்றப்பட்டார்.
 
இதனையடுத்து வீட்டுக்கு வந்த மாணவி நடந்த சம்பவங்களை தனது தங்கையிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் நேற்று தனது வீட்டில் மாணவி தீப்தி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
 
தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலையும், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா, பள்ளி கட்டணம் செலுத்தாததால் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்