ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில், இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், மத்திய அரசு இதை தடுத்து நிறுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு சென்ற நிமிஷா, பல மருத்துவமனைகளில் பணிபுரிந்து, பின்னர் சொந்தமாக ஒரு கிளினிக்கை தொடங்கினார். ஏமன் நாட்டின் சட்டங்களின்படி, அங்கு வெளிநாட்டை சேர்ந்தவர் ஒரு வணிகத்தை தொடங்க வேண்டுமானால், உள்ளூர் நபர் ஒருவருடன் இணைந்து செயல்பட வேண்டும். இதன்படி, 2014 ஆம் ஆண்டு அப்துல் மஹ்தி என்பவருடன் சேர்ந்து நிமிஷா இந்த கிளினிக்கை தொடங்கினார்.
இதை தொடர்ந்து, நிமிஷா மற்றும் அவரது குடும்பத்தினர், அப்துலை தங்கள் வீட்டிற்கு வரவழைத்து, மயக்க மருந்து செலுத்தி கொன்றுவிட்டதாகவும், அதன் பின்னர் நாட்டை விட்டு தப்பிக்க முயன்றபோது நிமிஷா கைது செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு ஏமன் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் ஒப்புதல் அளித்த நிலையில், ஜூலை 16ஆம் தேதி இந்த தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இதுகுறித்து கருத்து கூறிய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள், "இந்த விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நிமிஷாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து வருகிறோம். இந்த தண்டனையை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.