இன்று முதல் லாரி வேலைநிறுத்தம்: 75 லட்சம் லாரிகள் ஓடாது

திங்கள், 18 ஜூன் 2018 (09:09 IST)
கடந்த சில மாதங்களாக டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் இதனை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் லாரிகளும் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது, மூன்றாவது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் அதிகரிப்பு, சுங்க கட்டணம் உயர்வு ஆகிய காரணங்களால் லாரி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதாகவும், லாரித்தொழில் மேம்பட டீசல் விலையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தும் லாரி உரிமையாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
அதேபோல் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் பிரதமரிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் இந்த நிறுத்தத்தை முடிவு செய்துள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த வேலைநிறுத்தத்தில் மணல் லாரி உரிமையாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர்கள் ஜூலை 20ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
 
இருப்பினும் பெரும்பாலான லாரிகள் இன்றுமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்