பாயாசத்தால் பறிபோன ரூ.1.33 கோடி : போலிச் சாமியார் கைது

வெள்ளி, 17 ஜூன் 2016 (17:12 IST)
தொழிலதிபர் வீட்டில் பூஜை நடத்துவதாக கூறி, பாயாசத்தில் மயக்க மருந்து கொடுத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.


 

 
ஹைதராபாத் பஞ்சாராஹில்ஸ் எம்.எல்.ஏ காலனி பகுதியில் மதுசூதனன் ரெட்டி என்பவர், அவருடைய மனைவி வித்யாவதி மற்றும் மகன் சந்தோஷ்ரெட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் தொடர்ச்சியாக பல பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளனர். 
 
எனவே ஒரு சாமியாரை வீட்டிற்கு வரவழைத்து பூஜை செய்தால், துக்கங்கள் விலகும் என்று நம்பிய அவர், பெங்களூரில் இருந்து ஒரு சாமியாரை வரவழைத்தார். நேற்று காலை 10 மணி அளவில் பூஜை தொடங்கப்பட்டது. 
 
அந்த சாமியார் வீட்டின் நடுவில் ஒரு கோலத்தைப் போட்டு, அதில் வீட்டில் உள்ள எல்லா பணத்தையும் வைக்க சொல்லியிருக்கிறார். எனவே வீட்டிலிருந்த ரூ.1.33 கோடியை கோலத்தின் மீது மதுசூதனன் வைத்துள்ளார். அதன்பின் கோலத்தைச் சுற்றி மதுசூதனன், அவரின் மனைவி மற்றும் மகனை அமர வைத்து மதியம் 4 மணி வரை பூஜை செய்துள்ளார் அந்த சாமியார்.
 
அதன்பின், நான் வைத்து தரும் பாயாசத்தை குடித்து பூஜையை முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறி, அந்த சாமியாரே சமையலறைக்கு சென்று பாயாசம் தயார் செய்துள்ளார். அதன்பின் அதை அவர்கள் மூவருக்கும் கொடுத்துள்ளார். அதைக் குடித்த அவர்கள் மூன்று பேரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். அதன்பின் அந்த பணத்தை எடுத்துவிட்டு பறந்து விட்டார் அந்த சாமியார். 
 
அந்நிலையில், மதுசூதனனுக்கு அவரது உறவினர் ஒருவர் போன் செய்துள்ளார்.  ஆனால், நெடுநேரமாய் போனை எடுக்காததால், சந்தேகப்பட்டு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். மூன்று பேரும் மயங்கிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மூன்று பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
 
மதுசூதனன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கிய போலீசார், அந்தது பெங்களூரை சேர்ந்த போலி சாமியார் சிவானந்த பாபா என்பதையும், அவருடன் வந்த ஷாஜகான் என்ற டிரைவரும் வந்துள்ளார் என்பதையும் கண்டுபிடித்தனர். அதன்பின் பெங்களூர் சென்று அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 
 
விசாரணையில், அந்த சாமியார் மதுசூதனன் குடும்பத்தினருக்கு பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு பணத்தை எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. திருப்பதி, நெல்லூர் ஆகிய இடங்களில், இரண்டு முறை அவர்கள் இதேபோல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்