மல்லையாவின் ரூ. 9 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கம்?

சனி, 14 மே 2016 (11:06 IST)
`கிங் பிஷர்’ மதுபான ஆலை அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடம் கடனை வாங்கி திருப்பிச் செலுத்தாததால், அவரது சொத்துக்களை கையகப்படுத்தப் போவதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
 

 
விஜய் மல்லையா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு ஓடி விட்டார். தற்போது அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். அவரை இந்தியா வரவழைக்கவும், அவரிடம் கடனை வசூலிக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.
 
எனவே, இந்தியாவில் உள்ள அவரது அசையா சொத்துகள் மற்றும் பங்குகளை முடக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
“மல்லையாவுக்குச் சொந்தமான பங்களாக்கள், விலை உயர்ந்த கார்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றின் மதிப்புகள் ஏற்கெனவே கணக்கிடப்பட்டு உள்ளன; இதைத் தவிர, உள்நாட்டில் அவருக்குச் சொந்தமாக உள்ள அசையா சொத்துக்கள் மற்றும் பங்குகள் தற்போது மதிப்படப்பட்டுள்ளன.
 
அவற்றின் மதிப்பு 9 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது; அவற்றை முடக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமலாக்கத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
 
மல்லையாவுக்குச் சொந்தமான ஜெட் விமானங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் மே 29 மற்றும் 30ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. அவரது கடன் நிலுவையில் ரூ. 535 கோடியை ஈடுகட்டும் வகையில், அந்த விமானங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்