அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.200 கோடி ரூபாய் கடன் மோசடி செய்யப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், முதன்முறையாக அந்த மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமான் நிகோபார் மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.200 கோடி கடன் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் போர்ட் பிளேயர் மற்றும் அதை சுற்றியுள்ள ஒன்பது இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.
கூட்டுறவு வங்கியால் கடன் வழங்கியதில் நடந்த பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலியான நிறுவனங்களுக்கு கடன் மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதிகளை வழங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 15 நிறுவனங்கள் சட்டவிரோதமாக இந்த வங்கியின் மொத்த பணத்தையும் சுழற்சி செய்வதற்காகப்பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.