நிலையக் கூரையில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம்

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (05:22 IST)
இந்தியாவில் முதல் முறையாக மெட்ரோ இரயில் நிலையத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் நிலையம் இன்று திங்கள்கிழமை முதல் டில்லியில் செயல்படத் துவங்கியுள்ளது.
















 





துவாரகா செக்டார் 21 மெட்ரோ இரயில் நிலையத்தின் மேற்கூரையில், 500 கிலோ வாட்ஸ் மின் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையத்தை மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று புது டில்லியில் துவங்கி வைத்தார்.
 
டில்லியில் மேற்கூரையில் அமைக்கப்பட்ட மின் நிலையங்களில் இது தான் மிகப்பெரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை டில்லி மெட்ரோ நிறுவனம் முழுவதுமாகக் கொள்முதல் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இதை முன்மாதிரியாகக் கொண்டு மேலும் 5 மெட்ரோ இரயில் நிலையங்களின் கூரைகளிலும் இது போன்ற மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று இதற்காக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு கூறுகிறது.
 
அதில் இத்தகைய நடவடிக்கையின் மூலம் மின் தட்டுப்பாட்டை போக்க வழிவகை காண முடிவதோடு சுற்றுப்புறச் சூழலை மாசுப்படுத்தாமல் மின் உற்பத்தியை பெருக்க வாய்ப்பு அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த திட்டத்தை மேற்கொண்டு விரிவுப்படுத்தும் நோக்கில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மேற்கூரையை வடிவமைக்கும் பணிகளிலும் மின்துறை அமைச்சகம் முனைப்போடு செயல் படுவதாகவும் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
இதே சமயம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, இது போன்ற திட்டங்கள் மூலம் நவீன நகரங்களில் மாசுக்கட்டுப்பட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் மற்ற முயற்சிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்