திடீரென மன்னிப்பு கேட்டார் துணை முதல்வர் டிகே சிவகுமார்.. என்ன காரணம்?

Mahendran

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (14:52 IST)
கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடியதற்காக, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மன்னிப்பு கோரியுள்ளார். 
 
கடந்த வாரம், சட்டப்பேரவையில் பேசிக்கொண்டிருந்தபோது, 'நமஸ்தே சதா வத்சலே' என்று தொடங்கும் ஆர்.எஸ்.எஸ். பாடலை அவர் பாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடியது  சொந்த கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 
இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமார், "பா.ஜ.க.வினரை விமர்சிப்பதற்காகவே நான் அந்த பாடலைப் பாடினேன். ஆனால், எனது நண்பர்கள் சிலர் இதை அரசியல் ரீதியாக எடுத்துக்கொண்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. யாராவது வருத்தமடைந்திருந்தால், நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
 
மேலும், "நான் காந்தி குடும்பத்தை யாரும் கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ள மாட்டேன். நான் காங்கிரஸ்காரனாகவே பிறந்தேன், காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். கட்சிக்கு அப்பாற்பட்டு எனக்கு பல அரசியல் கட்சிகளில் நண்பர்கள் உள்ளனர். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை" என்றுதெளிவுபடுத்தினார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்