திரிவேணி சங்கமத்தில் உள்ள நீர் குளிப்பதற்கு ஏற்றதல்ல என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறிய நிலையில், அந்த நீர் குடிப்பதற்கே ஏற்றது என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நதிகளில் உள்ள நீர் குளிப்பதற்கு தகுதியற்றது என்று தெரிவித்திருந்தது. இந்த நீரில் பாக்டீரியா அளவு அதிகமாக இருப்பதால் குளிப்பதற்கு உகந்ததல்ல என்றும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மலத்திலிருந்து வரும் பாக்டீரியாக்கள் இதில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், அந்த அறிக்கையை யோகி ஆதித்யநாத் மறுத்துள்ளார். இதுவரை 55 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி சங்கமிக்கும் இந்த திரிவேணி சங்கமத்தில் உள்ள நீர் குடிப்பதற்கே உகந்தது என்றும், தவறான செய்திகளை இந்தியாவுக்கு எதிரானவர்கள் பரப்பி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.