கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து நிர்வாகிகளுடன் விவாதித்த தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரூரில் நேற்று நடந்த தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து கரூரில் இருந்து சென்னை சென்ற விஜய் அங்கிருந்து இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
தற்போது இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ20 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ2 லட்சமும் நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு இன்று விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அதில் பாதிக்கப்பட்ட மக்களை தான் உடனே சென்று சந்திக்க வேண்டும் என அவர் கூறியதாகவும், நிலைமையை ஆய்ந்து அதற்கேற்ப முடிவு செய்யலாம் என கட்சி நிர்வாகிகள் பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்த வார கூட்டங்களை ஒத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் இன்று அல்லது சில நாட்களுக்குள் மீண்டும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K