தென்னாப்ரிக்காவில் பெண்கள் பல ஆண்களை மணக்கலாம் என்ற சட்ட முன்மொழிவால் ஏற்பட்ட சர்ச்சை

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (23:43 IST)
தென்னாப்பிரிக்காவில் பெண்கள் பலதார மணம் புரியலாம் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, ஒரே நேரத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் புரிவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
 
இந்தத் திட்டம் தொடர்பாக தென்னாப்பிரிக்காவின் பழமைவாதக் குழுக்கள் தங்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளன. ஆனால் பேராசிரியர் காலின்ஸ் மச்சோகோ இது குறித்துச் சிறிதும் ஆச்சரியப்படவில்லை. மச்சோகோ பலதார மணம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
 
"ஆட்சேபக் குரல்கள் கட்டுப்பாடு குறித்தவை. ஆப்ரிக்கச் சமூகங்கள் உண்மையான சமத்துவத்திற்குத் தயாராக இல்லை." என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பு உலகில் மிகவும் சுதந்தரமான ஒன்றாகும், ஒரு பாலின திருமணம், ஆண்களுக்குப் பலதார மணம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறது.
 
பெண்கள் பலதார மணம் புரிவதை எதிர்ப்பவர்களில் தொழிலதிபர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை மோசஸ் மசெலெக்கு என்பவரும் ஒருவர். அவருக்கு நான்கு மனைவிகள் உள்ளனர். அவர், "இது ஆப்ரிக்க கலாசாரத்தை அழிக்கும். அவர்களின் குழந்தைகள் என்ன ஆவார்கள்? அவர்களின் அடையாளத்தை அவர்கள் எவ்வாறு அறிந்து கொள்வார்கள்?" என்று கேள்வி எழுப்புகிறார். பல மணம் செய்து கொண்ட அவரது குடும்பத்தைப் பற்றிய தென்னாப்பிரிக்க ரியாலிட்டி ஷோவின் நட்சத்திரம் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பேராசிரியர் மச்சோகோ அண்டை நாடான ஜிம்பாப்வேயில் பெண்கள் பலதாரம் புரிவது குறித்து ஆய்வு செய்துள்ளார். மச்சோகோ ஜிம்பாப்வேயில் பிறந்தார். அத்தகைய 20 பெண்கள் மற்றும் அவர்களது 45 கணவர்களுடன் அவர் பேசினார். இருப்பினும், அத்தகைய திருமணங்கள் சமூக ரீதியாகத் தடைசெய்யப்பட்டவை மற்றும் சட்டபூர்வமானவை அல்ல.
 
"சமூகம் பெண்களின் பல கணவர் முறையை மறுத்துவிட்டது, எனவே இதுபோன்ற திருமணங்களை ரகசியமாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது ரகசியமாக வைக்கப்படுகிறது. நம்பகமான நபரைத் தவிர வேறு யாராவது அவர்களிடம் கேள்வி கேட்கும்போது, அவர்கள் இது போன்ற திருமணங்களை மறுக்கின்றனர்." என்கிறார் அவர்.
 
மச்சோகோவின் ஆராய்ச்சியில் பங்கெடுத்த அனைவரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாதவர்கள். ஆனால் பெண்கள் மத்தியில் பல மணம் செய்வதை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தனர்.
 
பேராசிரியர் மச்சோகோ, "ஒரு மனைவி, தான் ஆறாம் வகுப்பில் இருந்தபோது அதாவது, சுமார் 12 வயதாக இருந்தபோது ஒரே நேரத்தில் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகக் கூறினார். இந்த யோசனை, ஒரு ராணி தேனீ எப்படி பல ஆண்களைக் கூட வைத்திருக்கிறது என்பதைப் பார்த்து தனக்கு வந்ததாக அவர் கூறுகிறார்."
 
அந்தப் பெண் வயது வந்தவுடன், தனது பல ஆண் நண்பர்களுடன் உடலுறவு கொள்ளத் தொடங்கினார், அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள். அவரது ஒன்பது கணவர்களில் நான்கு பேர் தனது பழைய ஆண் நண்பர்கள் என்று மச்சோகோ விளக்குகிறார்.
 
ஆய்வு
 
பெண்களின் பல கணவர் மணத்தில், பெண்கள் தான் உறவைத் தொடங்கி, அதில் பங்கேற்க தங்கள் கணவர்களை அழைக்கிறார்கள். சிலர் மணமகளின் விலையையும் செலுத்துகிறார்கள். மற்றவர்கள் ஒரு வாழ்க்கைத் துணையாக இருப்பதாக உறுதியளிக்கிறார்கள். ஒரு கணவன் தன் மற்ற உறவுகளில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்துகிறான் என்று பெண் உணர்ந்தால், அந்தப் பெண் அந்தக் கணவனை விட்டுப் பிரிகிறாள்.
 
பேராசிரியர் மச்சோகோ, தனது ஆய்வின் போது பேசிய ஆண்கள் அன்பின் காரணமாக இந்த வகை திருமணத்திற்கு தயாராக இருந்தனர் என்றும் தனது மனைவியை இழக்க அவர்கள் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கிறார்.
 
சில ஆண்கள் தங்கள் மனைவிகளுக்கு பாலியல் இன்பம் கொடுக்க முடியாது என்ற நிலையில், விவாகரத்து அல்லது திருமணத்தை தாண்டிய உறவை தவிர்ப்பதற்காக அவர்கள் இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
 
மற்றொரு காரணம் மலட்டுத்தன்மை. சில ஆண்கள் பிள்ளைகளைப் பெறுவதற்காக தங்கள் மனைவி மற்றொரு கணவரை மணக்க சம்மதம் தெரிவித்தனர். இதனால், அத்தகைய ஆண்கள் சமுதாயத்தில் தங்கள் மலட்டுத் தன்மையை மறைத்து வாழ முடிகிறது.
 
தென்னாப்பிரிக்காவில் பெண்கள் பலதாரம் புரியும் சூழல் குறித்து தனக்கு தெரியாது என்று பேராசிரியர் மச்சோகோ கூறுகிறார். பெண் ஆர்வலர்கள் சமத்துவம் மற்றும் காதல் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். தற்போதைய சட்டம் ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணம் புரியும் உரிமையை வழங்குகிறது.
 
பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களைப் பெறுவதற்கான திட்டம் குறித்து பச்சை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பச்சை அறிக்கை என்பது மக்களின் கருத்து கேட்பிற்காக அரசாங்கத்தால் வெளியிடப்படும் அறிக்கை. ஏனெனில் தென் ஆப்ரிக்காவில் 1994ஆம் ஆண்டில் வெள்ளை சிறுபான்மையின ஆட்சியின் முடிவிற்குப் பிறகு, திருமணச் சட்டங்களில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றத்தின் தொடக்கமாக இந்த முன்மொழிவு உள்ளது.
 
"இந்த பச்சை அறிக்கை, மனித உரிமைகளை நிலைநிறுத்துவதைப் பற்றியது என்பதை நினைவில் கொள்வது முக்கியம், அதை நாம் இழக்கக்கூடாது" என்று மகளிர் சட்ட மையத்தின் வழக்கறிஞர் சார்லின் மே கூறுகிறார். இந்த சட்ட நிறுவனம் பெண்களின் உரிமைகளுக்காக சட்டப் போராட்டத்தை நடத்துகிறது.அவர், "எங்கள் சமூகத்தின் ஆணாதிக்க சிந்தனைக்கு எதிராக கொண்டுவரப்படும் இந்த சட்ட சீர்திருத்தத்தை எங்களால் நிராகரிக்க முடியாது." என்கிறார்.தற்போதைய சட்ட மும்மொழிவு முஸ்லீம், இந்து, யூத மற்றும் ரஸ்தாபெரியன் (1930 களில் ஜமைக்காவில் உருவாக்கப்பட்ட ஒரு மதம்) திருமணங்களுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குகிறது.இந்த முன்மொழிவு, சம்பந்தப்பட்ட சமூகங்களால் பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது, ஆனால் பலதாரம் மணத்தை சட்டப்பூர்வமாக்கும் திட்டம் மதத் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த மதத் தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பல இடங்கள் உள்ளன.
 
'ஏப்பம் விடாத மாப்பிள்ளை தேவை' - வைரலான திருமண விளம்பரம்
தமிழகத்தில் நடந்த 318 குழந்தை திருமணங்கள் - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி காரணம்
எதிர்க்கட்சியான ஆப்ரிக்க கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (ஏசிடிபி) தலைவர் ரெவரெண்ட் கென்னத் மெஷூ, இது சமூகத்தை அழிக்கும் என்று கூறியுள்ளார்.
 
அவர், "ஒரு கணவன், மனைவியிடம், நீ என்னை விட, அந்தக் கணவனுடன் அதிக நேரம் செலவிடுகிறாய் என்று கூறி கணவர்களுக்கிடையில் சச்சரவு வரும் காலம் வரும்" என்று கணிக்கிறார்.
 
"ஒரு குழந்தை பிறந்தால், தந்தை யார் என்பதைக் கண்டுபிடிக்க பல டி.என்.ஏ சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம்" என்று இஸ்லாமிய அல்-ஜமா கட்சியின் தலைவர் ஜெனிஃப் ஹென்ட்ரிக்ஸ் கூறினார்.
 
மறுபுறம், செலெகு, அரசியலமைப்பில் இருப்பதால் மட்டுமே ஒரு விஷயம் நமக்கு நன்மை தரும் என்று அர்த்தமல்ல என்றும் அவர் கூறுகிறார்.
 
உங்களுக்கே நான்கு மனைவிகள் இருக்கும்போது பெண்களை ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை கொண்டிருக்க கூடாது என்று கேட்கப்பட்டபோது, "எனது திருமணங்களால் நான் ஒரு ஏமாற்றுக்காரன் என்று அழைக்கப்பட்டேன், ஆனால் இப்போது நான் அமைதியாக இருப்பதை காட்டிலும் குரல் கொடுக்கவே விரும்புகிறேன். இது ஆப்ரிக்க கலாசாரத்துக்கு எதிரானது என்று என்னால் சொல்ல முடியும். நாங்கள் யார் என்பதை மாற்ற முடியாது. " என்று கூறினார்.
 
ஆனால் பேராசிரியர் மச்சோகோ கூறுகையில், ஒரு காலத்தில் பெண்கள் மத்தியில் பல கணவர் மணம் என்பது, கென்யா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் நைஜீரியாவில் இருந்தது, அது சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுவதால் கேபானில் இன்னும் நடைமுறையில் உள்ளது என்கிறார்.
 
"கிறித்துவம் மற்றும் காலனித்துவத்தின் வருகையால், பெண்களின் பங்கு குறைந்துவிட்டது. அவர்கள் இப்போது சமமாக நடத்தப்படுவதில்லை. திருமணம் என்பது வெறும் வாரிசை உறுதிப்படுத்தும் கருவியாக மாறியுள்ளது" என்று அவர் கூறுகிறார்.
 
இத்தகைய திருமணங்களால் பிறந்த குழந்தைகளைப் பற்றிய கவலைகள் உண்மையில் ஆணாதிக்கத்தின் பிரதிபலிப்பு தான் என்று பேராசிரியர் மச்சோகோ கூறுகிறார்.
 
குழந்தைகளைப் பற்றிய கேள்விக்கு விடை மிகவும் எளிதானது என்று அவர் கூறுகிறார். இத்தகைய திருமணங்களிலிருந்து பிறந்த குழந்தைகள் குடும்பத்தின் குழந்தைகள் என்பது அவர் கருத்து.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்