கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மதமாற்றம்? உத்தரகாண்டில் போராட்டம்!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (16:50 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மதமாற்றம் நடைபெற்றதாக போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டுவருகிறது. மக்கள் அலங்கார விளக்குகளால் வீட்டை அலங்கரித்து கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள புரோலா என்ற கிராமத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது.

அங்குள்ள கிறிஸ்தவ மையத்தில் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் நேபாள நாட்டை சேர்ந்த சிலரும் அதில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் சிலரை கட்டாய மதமாற்றம் செய்வதாக அப்பகுதி கிராமவாசிகள் இடையே தகவல் பரவியுள்ளது.

இதனால் அந்த கிறிஸ்தவ மையத்தை கும்பலாக சுற்றி வளைத்த கிராம மக்கள் கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதனால் கிராம வாசிகளுக்கும், நிகழ்ச்சியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நிகழ்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் அனுப்பி வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K
அடுத்த கட்டுரையில்