இந்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அது தொடர்பாக எந்த கருத்தையும் வெளியிடாத அமைச்சர் கிரண் ரிஜிஜு, மசோதாவை அவையில் அறிமுகம் செய்தார்.
இதைத்தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் அவை நடவடிக்கைககள் பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஏதுவாக, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த மசோதாவில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும், இந்த இணைப்பு கட்டாயமாக்கப்படாது என அரசு கூறுகிறது. மேலும், ஒரே நபர் வெவ்வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு பணிகள் பள்ளி, கல்லூரி கட்டடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த மசோதா நிறைவேறினால், இனி தேர்தல் வாக்குப்பதிவை நடத்த எந்த கட்டடத்தையும் தனது கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் தற்காலிகமாக எடுத்துக்கொள்ள மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.
18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி 18 வயது நிரம்பிய நபர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆண்டில் 4 முறை வாய்ப்புகள் வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது.