பெற்றோரை கைவிட்டால் சிறை தண்டனை! – மத்திய அரசு அதிரடி!

செவ்வாய், 1 அக்டோபர் 2019 (14:16 IST)
பெற்றோரை கவனிக்காமல் விடும் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

பெற்றோர்களின் சொத்துகளை பறித்துக்கொண்டு அவர்களை நிராதரவாக விட்டுவிடும் போக்கு இந்தியா முழுவதும் அதிகரித்து வருவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் தஞ்சையில் நடந்த குறைதீர் முகாமில் கோட்டாட்சியரிடம் மனு அளித்த சில முதியோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களுக்கு ஒருவேளை உணவு கூட அளிப்பதில்லை என கண்ணீர் விட்டு அழுதார்கள்.

தற்போது மத்திய அமைச்சகம் முதியோர்களுக்கான வாழ்வுரிமைக்காக சட்ட திருத்தம் கொண்டு வர முயற்சித்து வருகிறது. 2007ம் ஆண்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர உள்ளார்கள்.

தற்போதைய சட்டத்தின் படி பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு மாதம் 3000 முதல் 10000 வரை பண உதவி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்படும். மேலும் முதியவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களது மகன்கள், மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளை சேர்ந்தது.

இந்த சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து பெற்றோர்களை பாதுகாக்காதவர்களுக்கு இனி 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்க இருக்கிறார்கள். அதேபோல முதியவர்களை பேணி காக்க வேண்டிய உரிமை அவர்களிடமிருந்து பெறப்பட்ட சொத்துகளை அனுபவிக்கும் நபர்களையும் சாரும் என மாற்றப்பட உள்ளது. எனவே மகன்கள், மகள்கள் இல்லாவிட்டாலும், மருமகன், மருமகள், தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் ஆகியோரும் இந்த சட்டத்தில் கொண்டு வரப்படுவார்கள்.

இந்த சட்ட திருத்தத்தால் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை முறையாக பராமரிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்