சாதிய கொடுமைகளும், படுகொலைகளும் இந்தியாவின் பல பகுதிகளில் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. அப்படிப்பட்ட மாநிலங்களில் முக்கியமான ஒன்று பாஜக ஆளும் உத்தர பிரதேசம். அங்குள்ள பரிலி செயின்பூர் பகுதியின் எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா. பிராமண சமுதாயத்தை சேர்ந்த இவர் தொடக்க காலம் முதலே பாஜகவில் அடிப்படை உறுப்பினராய் இருந்து எம்.எல்.ஏவாக உயர்ந்துள்ளார். இவரது மகள் சாக்ஷி. இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் சாக்ஷி அவருடன் கல்லூரியில் படித்து வந்த அஜிதீஸ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். அஜிதீஸ் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இருவரின் திருமணத்துக்கும் தன் அப்பா ராஜேஷ் மிஸ்ரா சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்பதை உணர்ந்த சாக்ஷி வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலன் அஜிதீஸுடன் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
ஆனாலும் தனது அப்பாவால் தங்களது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று நினைத்த சாக்ஷி “எனது அப்பாவுக்கு தெரியாமல் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எனது அப்பாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து அச்சுறுத்தல் இருக்கிறது. எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என வீடியோ ஒன்றை வெளியிட்டார். பாஜக எம்.எல்.ஏ மகள் வெளியிட்ட இந்த வீடியோ வைரலாக அனைத்து பக்கமும் பரவியது.
டிஐஜி பாண்டே “திருமண தம்பதிகள் எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை. அவர்கள் இருக்கும் இடத்தை கூறினால் பாதுகாப்பு வழங்க தயாராய் இருக்கிறோம்” என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா “நான் காதலுக்கு எதிரானவன் இல்லை. என் மகள் காதலை சேர்த்து வைப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அந்த பையனுக்கு எனது மகளை விட வயது ரொம்ப அதிகம். மேலும் அவனுக்கு வேலை எதுவுல் இல்லை” என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.