அருணாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சி..! சிக்கிமில் ஆட்சியை தக்க வைத்த கிராந்திகாரி மோர்ச்சா..!

Senthil Velan

ஞாயிறு, 2 ஜூன் 2024 (16:48 IST)
அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியும் மீண்டும் ஆட்சியை பிடித்தன. அதேநேரம் சிக்கிமில் பாஜக, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
 
இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 -ம் தேதி வரை 7 கட்டங்களாக  நடந்து முடிந்தது.  மக்களவை தேர்தலோடு, ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றன.
 
அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்குள்ள 60 சட்டப்பேரபை தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் உள்ளன.
 
அருணாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் எஞ்சியுள்ள 50 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அருணாச்சல் பிரதேசத்தில், பாஜக 44 இடங்களில் வெற்றியும், 2 இடங்களியும் முன்னிலையும் பெற்றுள்ளது.
 
தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 2 இடங்களில் வெற்றியும், 1 இடத்தில் முன்னிலையும் பெற்றுள்ளன. பாஜக 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் மீண்டும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. தற்போதைய முதல்வர் பெமா காண்டுவே, மீண்டும் முதலமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதேபோல், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 32 தொகுதிகளில், 31 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 1 இடத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வெற்றி பெற்றுள்ளது.

ALSO READ: தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்..! ஜி.கே வாசன் நம்பிக்கை..!!

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இதன்மூலம் 31 இடங்களை கைப்பற்றிய சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி, அம்மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்