கர்நாடகாவில் காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைத்த குமாரசாமியின் ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா கடந்த 6ம் தேதி மந்திரிசபையை விரிவாக்கம் செய்தார். இதில் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த 10 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. வேறு கட்சிகளிலிருந்து வந்து சேர்ந்தவர்களுக்கு பதவிகளை வழங்கிவிட்டு பாஜகவினரை எடியூரப்பா கண்டுகொள்ளவில்லை என பாஜக உறுப்பினர்கள் சிலர் மனக்குறை கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் அவரது இல்லத்தில் எம்.எல்.ஏக்கள் சிலர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் பாஜக குறித்த அதிருஒதி எம்.எல்.ஏக்கள் இணைந்து திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் உலாவ தொடங்கின. ஆனால் இதுகுறித்து பேசியுள்ள ஜெகதீஷ் ஷெட்டர் எம்.எல்.ஏக்கள் சில சந்தேகங்களை கேட்க மட்டுமே வந்ததாகவும், அமைச்சர் பதவி குறித்து விவாதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.