உத்தர பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை பாஜகவினர் கங்கை நீரால் சுத்தம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கன்னுஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வரும் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் ஈடுபட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் பிரசாரத்தை தொடங்கு முன்பாக அகிலேஷ் யாதவ், கன்னுஜ் தொகுதியில் உள்ள சித்தாபீத் பாபா கௌரி சங்கர் மகாதேவ் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது கோயிலில் பூஜைகளையும் அகிலேஷ் யாதவ் மேற்கொண்டார்.
இந்நிலையில் அகிலேஷ் யாதவ், கோயிலில் வழிபட்டு விட்டு சென்றதும், கோயில் வளாகத்தை கங்கை நீரை கொண்டு பாஜகவினர் சுத்தம் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜகவினர் விளக்கம் அளித்துள்ளனர். அகிலேஷ் யாதவுடன், முஸ்லீம் தலைவர்களும் கோயிலுக்கு வந்ததாகவும், அவர்கள் ஷூ அணிந்தபடியே கோயில் வளாகத்திற்குள் நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனவே தான் நாங்கள் கங்கை நீரை கொண்டு சுத்தம் செய்து சடங்குகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்று பாஜகவினர் தெரிவித்தனர்.
அகிலேஷ் யாதவ் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பாஜக கோயில் வளாகத்தை கங்கை நீரில் சுத்தம் செய்ததாக சமாஜ்வாடி கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.