மினிமம் பேலன்ஸ் அபராத தொகையை ரத்து செய்ய வங்கிகள் ஆலோசனை.. ஆனால் அதற்கு பதில் அதிர்ச்சி நடவடிக்கை..!

Mahendran

செவ்வாய், 8 ஜூலை 2025 (10:23 IST)
ஏற்கனவே சில வங்கிகள் மினிமம் பேலன்ஸ் அபராத தொகையை ரத்து செய்துள்ள நிலையில், தற்போது அனைத்து வங்கிகளும் இந்த அபராதத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதே நேரத்தில், டெபிட் கார்டு சேவை கட்டணங்களையும், ஏ.டி.எம். கூடுதல் பரிவர்த்தனைக்கான கட்டணங்களையும் உயர்த்த வங்கிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட வங்கிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
 
கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை ஏற்கெனவே மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்துள்ள நிலையில், மற்ற அனைத்து வங்கிகளும், குறிப்பாக தனியார் வங்கிகளும் இந்த அபராத தொகையைக் கைவிடுவது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகின்றன. வங்கிகளின் நிகர லாபத்தைவிட அபராத கட்டணங்கள் மூலமாகவே அதிகம் வசூலித்து வருவதாக மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. மத்திய நிதி அமைச்சக கூட்டங்களிலும் இது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. எனவேதான், மினிமம் பேலன்ஸ் அபராத தொகையை ரத்து செய்ய வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால், அதே நேரத்தில், கூடுதல் வருவாய்க்காக டெபிட் கார்டு சேவை கட்டணங்களையும், ஏ.டி.எம்-மில் கூடுதல் பரிவர்த்தனை செய்தால் அதற்கான கட்டணங்களையும் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவதால், வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்