அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது இந்தியா வந்து சேர்ந்தவர்களில் 11 பேருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 340 இந்தியர்கள் சமீபத்தில் நாடுகடத்தப்பட்ட நிலையில், அவர்கள் மூன்று விமானங்களில் வந்து சேர்ந்தனர். இந்த நிலையில், அவர்களில் 11 பேரை மட்டும் தேர்வு செய்து அமலாக்கத்துறை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணைக்கு பின்னர் சில தகவல்களை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 340க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில், 11 பேருக்கு மட்டும் ஏன் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு குடியேற, 40 முதல் 50 லட்சம் வரை புரோக்கர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மெக்சிகோ வழியாகவும், கனடா வழியாகவும், டூரிஸ்ட் விசா, மாணவர் விசா மற்றும் போலி திருமணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லும் பணியை சில நிறுவனங்கள் செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.