சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆஞ்சநேயர் ஒரு காட்டுவாசி என்றும், அவர் ஒரு தலித் என்றும், ராமனுக்கான கடமை முடியும்வரை ஓய்வின்றி உழைக்கவேண்டும் என்று முடிவெடுத்தவர் என்றும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். தெய்வங்களையும் ஜாதி ரீதியாக பிரிக்கும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த பேச்சுக்கு முதல்வர் யோகி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தேசிய பழங்குடியின தலைவர் நந்த் கிஷோர் சாய் என்பவர் ஆஞ்சநேயர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்தான், அவர் தலித் அல்ல என்று முதல்வர் தெரிவித்துள்ளதால் அவரது சாதி சான்றிதழை தனக்கு வழங்கவேண்டும் என வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் தனக்கு ஒரு வாரத்துக்குள் ஆஞ்சநேயர் சாதி சான்றிதழை தராவிட்டால் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் எச்சரித்துள்ளார்.