மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஐயப்பனுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றார். அவருடன் சில கட்சி ஆட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை பம்பை அருகே தடுத்து நிறுத்தினார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சரை மட்டுமே அனுமதிக்க முடியும் என போலீஸார் கூறினர்.
அதுமட்டுமில்லாமல் அவரை காரில் செல்ல அனுமதிக்காத போலீஸார் பேருந்தில் மட்டும்தான் செல்ல வேண்டும் என கூறியதால் அவர் தரிசனம் செய்ய சக பக்தர்களோடு பேருந்தில் சென்றார். கேரள போலீஸ் மத்திய அமைச்சரையே அவமத்துவிட்டனர் என கடும் சர்ச்சை கிளம்பியது. இதனைக்கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொன்ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சூர் காவல் ஆணையராக யதீஷ் சந்திரா இடமாற்றம் செய்யப்பட்டது, சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்தியதற்கான பழிதீர்க்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என பலர் சொல்கின்றனர்.