2019 தேர்தல் பிரச்சாரத்தில் தோனி? அமித்ஷா பேசியது என்ன?
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (16:29 IST)
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கைகளை தயார் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
அதேபோல் பாஜக மக்களை எப்படி எல்லாம் கவரலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த முறை மோடி பெயரை மட்டும் சொல்லி வாக்கு கேட்காமல், மற்ற சிலரையும் வைத்து வாக்கு சேகரிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
இதற்காக பாஜக இந்திய பிரபலங்களின் உதவியை நாடவுள்ளதாம். அதாவது, பல்வேறு துறைகளில் இருக்கும் பிரபலங்களை பாஜகவிற்கு ஆதரவாக பேச வைக்க இருக்கிறார்களாம். இதில் கிரிக்கெட், சினிமா, வர்த்தகம் என எல்லா துறையிலும் அடக்கம்.
அதன்படி, முதற்கட்டமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேரில் சந்தித்துள்ளார். 4 வருட பாஜக ஆட்சி குறித்து தோனியிடம் எடுத்து கூறியுள்ளார்.
மேலும், தோனியை நாடாளுமன்ற தேர்தலுக்காக, அமித்ஷா பிரச்சாரம் செய்ய அழைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தோனி இது குறித்து என்ன முடிவெடுத்துள்ளார் என தெரியவில்லை.
2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி பாஜக தற்போதே வெற்றி வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டது. அதன்படி சம்பார்க் ஃபார் சமர்தன் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே, லதா மங்கேஷ்கர், கபில் தேவ், மாதுரி திக்சிட், ரத்தன் டாடா உள்ளிட்ட 25 பிரபலங்களையும் அமித்ஷா சந்தித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது தோனியையும் சந்தித்துள்ளார்.