10ஆம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் பெயில்: பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

வியாழன், 31 மே 2018 (17:22 IST)
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் அந்த பகுதி மக்கள் அந்த பள்ளிக்கு பூட்டு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹரியானா மாநிலத்தில் உள்ள பல்காட் மாவட்டத்தில் உள்ள தீகோட் என்னும் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 51 மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வை எழுதினர். சமீபத்தில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியானபோது அந்தப் பள்ளியில் தேர்வெழுதிய ஒரு மாணவர் கூட தேர்ச்சி அடையவில்லை. இந்த தகவல் வெளியே தெரியவந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். 
 
ஒரு மாணவர் கூட தேர்ச்சி அடையாததற்கு அந்த பள்ளி நிர்வாகத்தினர்களின் மெத்தனமே காரணம் என்று கூறி அந்த பள்ளியை இழுத்து மூடி பெரிய பூட்டை போட்டனர். மேலும் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட ஒருசில ஆசிரியர்களை மாற்றும் வரை பள்ளிக்கு போட்ட பூட்டை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தின் கல்வி அதிகாரி கூறியுள்ளார். இதனையடுத்து தற்போது அந்த பள்ளியை இயங்க அந்த பகுதியினர் அனுமதித்துள்ளனர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்