அகிலேஷ் யாதவ் அத்தை என்று அழைக்கிறார். அப்படியென்றால் அவர் முதலில் தயாசங்கர் சிங்கை கைது செய்யவேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
இது குறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “என்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருப்பதன் மூலம் பாஜகவும், ஆளும் சமாஜ்வாடி அரசும் எனக்கு எதிராக சதி செய்வது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் இதுபோன்ற சதிவேலையில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
பாராளுமன்ற மேலவையில் பேசியதன் அடிப்படையில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். ஆனால் ஒரு எம்.பி. பாராளுமன்றத்தில் பேசியதற்கு எதிராக வெளியே போலீசார் வழக்கு பதிவு செய்ய முடியாது. இது பாராளுமன்ற அவமதிப்பு ஆகும்.
என்னை முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அத்தை என்று அழைக்கிறார். அப்படியென்றால், அவர் முதலில் தயாசங்கர் சிங்கை கைது செய்யவேண்டும். பகுஜன் சமாஜ் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும்” என்று கூறியுள்ளார்.